Friday, 15 June 2007

வேதனைகள்...

1. ரஜினி ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உலகம் முழுதும் சிவாஜி இன்று திரையிடப்படுகிறது.

2. ரஜினி ரசிகர்கள் அவரது கட் அவுட்டிற்கு பால் முதல் பீர் வரை அபிஷேகம் செய்தனர்.

இது தவிர, இத்திரைப்படத்தின் சாதனைகள் என்று சொல்லி மேலும் பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது.

இனையத்தில் வாழும் மக்களோ பல கேள்விகளுடன், பல தலைப்புகளில், தங்களது பங்களிப்பை தந்தவண்ணம் உள்ளனர். இதில் அவர்கள், ரசிகனாகவும், நடுநிலைவாதியாகவும், சாதியின் அடிப்படையிலும், தத்தமது கருத்துக்களைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர். இதில் திராவிடர், ஆரியர் என்ற ரீதியாகவும் பதிவுகள் வேறு. இதில் சிறப்பு என்னவெனில் தங்களுது சாதி அடிப்படையில், அவர்களின் சாதியை உயர்த்தி மார்தட்டியும், சிவாஜி உருவாக ஆரியர் தான் காரணமென்றும், ஏன் ரஜினியை திராவிடர்களுக்கு பிடிப்பதில்லை என்றும், ரஜினியின் ரசிகர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் என்றும் இன்னும் எத்தனையோ பதிவுகள் வந்தவண்ணம் உள்ளது.

ஏன் இதற்கு இவ்வளவு போட்டி? சமுதாயத்தில் பணரீதியாக, அதிகாரரீதியாக, அரசியல்ரீதியாக ஒருவர் செல்வாக்கு பெற்றவராய் விளங்கும்போது அவர் என் சமூகத்தை சேர்ந்தவர் என்று சாதிய கட்டமைப்பில் மூழ்கிப்ப்போன மூடர்கள் முழங்குகின்றனர். இவர்கள் யார்?, தனது சமுதாயத்தின் உண்மையான முன்னேற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அறியாதவரா? இல்லை, இச்சமுதாயம் முன்னேற என் சாதி மக்கள் தான் ஒரே காரணமாக இருக்க முடியும் என்று, தன் சமூகத்தின் ஆளுமையை நிலைநாட்ட மார்தட்டும் மடையர்களா? இல்லை இல்லவே இல்லை, இவர்கள் தன் வீடு, தன் குடும்பம், தன் மக்கள் என்று, சுய சிந்தனை இல்லாமல், முழுக்க முழுக்க தன் சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு தன் முன்னேற்றத்திற்காக மற்றவர்களின் அறியாமையை வஞ்சமாக பயன்படுத்தி, சமுதாய அக்கறையின்றி இருக்கும் உயிர் மற்றும் பகுதியளவு உணர்சியே உள்ள வெறும் சடலங்கள்.

இவர்கள் தான், நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ சினிமா ரசிகர்கள் என்ற பெயரில், பால் முதல் பீர் வரை அபிஷேகம் நடைபெறும், கேவலமான காட்சிகளுக்கு காரண கர்த்தாக்கள்.

சினிமா என்பது ஒரு தொழில், மக்களின் உணர்ச்சிகளோடு நேரடித்தொடர்புடைய ஒரு பொழுதுபோக்கு ஊடகம். அதில் போதிய பொழுதுபோக்கு அம்சங்கள் இன்றி தவிக்கும் மக்களின் அறியாமையை தனக்கு சாதகமாக்கி பணம் பண்ணும் படைப்பாளிகளும், நடிகர் என்ற பெயரில், இக்கேவலமான நிகழ்ச்சிளை உண்மையாக தடுக்க மறுக்கும் இவர்கள் மிக முக்கிய காரண கர்த்தாக்கள்.

இதில் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைகளில், தங்களது சுய நலத்திற்காக, மற்றவரின் அறியாமையையும், இயாலமையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இதில், பத்திரிக்கை போன்ற சமுதாயத்துடன் நேரடித்தொடர்புடைய பிற ஊடகங்கள், தங்களது சுய லாபத்திற்காக, தன்னுடய சுயநலத்தை பெறும் பங்காக ஊற்றி வளர்த்துவருகின்றனர். இதில் அரசியல் கட்சிகளும், அரசியல் வாதிகளும் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் பல்வேறு வகையில் வேறுபட்டு இருப்பினும், தனது சுய முன்னேற்றத்திற்காக, மிகுந்த சுயநலத்துடன், ஓர் அணியில் மறைமுகமாக திரண்டு, வெளித்தோற்றத்தில் எதிர் எதிர் குழுக்களாக பசு தோல் போர்த்திய புலியாய் வலம் வருகின்றனர்.

ரஜினி ரசிகர்கள் அவரது கட் அவுட்டிற்கு பால் முதல் பீர் வரை அபிஷேகம் செய்தனர்

இதற்கு என்ன முக்கிய காரணம்? திராவிடர்களின் அறியாமையா? இல்லை ஆரியரின் அரிய கண்டுபிடிப்பில் வந்த, மிகச்சிறந்த நடிப்பாற்றல் பெற்ற நடிகருக்கு கிடைத்தே தீரவேண்டிய பாராட்டா?

எது உண்மை? நமது தேசத்தில், அடிமட்ட மக்களாய், போதிய கல்வியறிவு, விழிப்புணர்வு, மற்றும் போதிய பொழுதுபோக்கு அம்சமின்றி தவிக்கும் மக்களின் அறியாமையே அன்றி வேறென்ன..

இதில் திராவிடராவது, ஆரியராவது? அனைவரும் அடங்குவர். சிலர், எண்ணிக்கை அடிப்படையில் பேதம் பார்க்கலாம். ஆனாலும் ஒரு பானை சோற்றில் ஒரு சோறு பதம் என்ற கதைதான்.

இதில் சிவாஜி உருவாக ஒரு ஆரியன் தான் காரணம் என்று மார்தட்டுவோர், தன் குடும்பத்தில் ஒருவர், ரஜினியின் போஸ்டருக்கு பாலோ, பீரோ கொண்டு அபிஷேகம் செய்து, தலைவனாக ஏற்பின், தன்னுடைய சக ஆரியனின் கண்டுபிடிப்பை பெருமையாக கொள்வாரா? இல்லை, இதனால் பல திராவிடர்களின் அறியாமையையும், இயலாமையையும் சாதகமாக்கி பலரது வாழ்க்கையை, சினிமா என்ற மாய மோகத்தினால் அழித்தமைக்கு ஆரியன் என்று பெருமைப்படுவாரா?

இல்லை! திராவிடர் திராவிடர் என்று கூறி திராவிடர்களின் முன்னேற்றத்திற்காக போராடுவதா கூறிக்கொள்வோர், இத்தகைய நிகழ்ச்சிகளை எதிர்த்து குரல் கொடுப்பார்களா? திராவிடர்களின் அறியாமையைப் போக்க முயலுவரா? எப்படி முயலுவர்? அந்த அறியாமைதான அவர்களை வாழவைத்து, ஆட்சியில் அமரவைக்கிறது என்பதை அறியாத மூடரா என்ன?

இல்லை! சமுதாத்திற்க்காக போராடுவோர் என்று கூறும் பத்திரிக்கை முதலான பிற ஊடகங்கள், இக்கேவலமான நிகழ்ச்சிகள் ஏற்பட காரணமானவர்கள் பற்றி விமர்ச்சிப்ரோ?

இல்லை! இதில் நேரடித்தொடர்புடைய நடிகரோ, இல்லை படைப்பாளிகளோ மக்களின் அறியாமையை போக்க நினைப்பரோ?

எப்படி நினைப்பர், ரசிகர்களுக்காக, அவர்களின் விருப்பத்திற்காக என்று சொல்லி சொல்லி,தன் முன்னேற்றத்திற்காக,திரைப்படங்களை உருவாக்கும் படைப்பாளிகள், தன் குடும்பத்தில் உள்ள ஒருவரை தரக்குறைவாக சித்தரித்து, பணம் பண்ண நினைப்பரோ?
இப்படி கேட்டால்? இது ஒரு தொழில், தொழில் ரீதியாக கையாளப்ப்டவேண்டும், இதை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர் என்று சப்பைக் கட்டு கட்டுவர்.

அதில் நடித்த நடிகரோ, தன்னுடைய முன்னேற்றத்தினைக் கருத்தில் கொண்டு வேறு ஒரு காரணம் கூறுவார். இல்லை அதிக பட்சமாக இது வெறும் சினிமா, பொழுதுபோக்கிற்காக என்று சொல்லுவர்.

இது எதற்கு ஒப்பாகும் என்றால்? எப்படி இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெரும்பொழுது, கிரிக்கெட் விளையாட்டைவிட மேலானது என்று கூறி ரசிகர்களை உசுப்பேற்றி, படுதோல்லி அடையும் போது, இது வெரும் விளையாட்டு என்று, இரட்டை வேடம் இட்டு நா கூசாமல் கூறுவதுபோலாகும்.

சினிமா என்பது மக்களின் உணர்ச்சிகளோடு நேரடித்தொடர்புடைய உணர்வுகளின் ஒர் ஊடகமாகும். அதனை மிகுந்த கவனத்துடன் கையாளப்பட்வேண்டும்.

ஆனால், இவர்கள் அனைவரும், தங்களது சுய லாபத்திற்காக, மிகுந்த சுயநலப்போக்குடன், இரட்டை வேடமிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதில் ஆரியன் என்றோ? திராவிடன் என்றோ? பெருமைப்பட்டு மார் தட்டுவதில் என்ன இருக்கிறது?

உணர்ச்சிளை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்ற, ஆறு அறிவு கொண்ட ஒரு மனிதன், தன்னலப்போக்கில், தன் சுயலாபத்திற்காக, தனித்தனி குழுக்களாக பிரிந்து, சக மனிதனின் அறியாமையை தமக்கு சாதகமாக்கி, மற்றவர்களைத் தாழ்த்தி வீழ்த்த நினைக்கும் குறுகிய மனப்பான்மை கொண்ட அந்த மனிதர், எந்த சாதியானலும், மதமானாலும் அவன் மனிதன் அன்று. அவன் மனிதன் மற்றும் விலங்கிற்கு அப்பாற்பட்ட ஒர் கீழ் பிறவியே அன்றி வேறோன்றும் அல்ல. அவன் ஒரு பிரபலமானலும் சரி, பணம் படைத்தவனாயினும் சரி அவன் ஒரு கீழ்பிறவியெ!!!!!!!!!